இதுவரை 43 குழந்தைகள் உட்பட 596 உக்ரைன் மக்கள் பலி: ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தகவல்


இதுவரை 43 குழந்தைகள் உட்பட 596 உக்ரைன் மக்கள் பலி: ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தகவல்


கீவ்: உக்ரைன் - ரஷ்யா இடையிலான 4ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ள நிலையில், இதுவரை 43 குழந்தைகள் உட்பட 596 உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் என்று ஐ.நா. சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண பல நாடுகளும் வலியுறுத்தி வருகிறது. அதையடுத்து உக்ரைன் - ரஷ்யா இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டின் எல்லை நகரமான கோமலில் கடந்த மாதம் 28ம் தேதி நடைபெற்றது.

சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற அந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில், எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. ெதாடர்ந்து 2 முறை பேச்சுவார்த்தையும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வமான முடிவுகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், உக்ரைன் - ரஷ்யா இடையேயான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை இன்று காணொலி மூலமாக நடைபெறுகிறது. உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 18வது நாளாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், இன்றைய பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதனிடையே, உக்ரைன் வான்வெளியை மூட வேண்டும் என்று நேட்டோ அமைப்புக்கு உக்ரைன் அதிபர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘எங்கள் வான்வெளியை நீங்கள் மூடவில்லை என்றால், ரஷ்ய ராக்கெட்டுகள் உங்கள் பிரதேசத்தில், அதாவது நேட்டோ பிரதேசத்தில் விழுவதற்கு அதிக நேரம் ஆகாது. உக்ரைன் - போலந்து எல்லைக்கு அருகே உள்ள யாவோரிவ் ராணுவ பயிற்சி மையத்தில், ரஷ்யா விமானங்கள் தாக்குதல் நடத்தி வருவதால் தங்கள் வான்வெளியை மூட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 596 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். குறைந்தது 1,067 பேர் காயமடைந்துள்ளனர். அதில், 43 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 57 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

GET ON THE DIAGONAL WITH THE CURVY CHRISTMAS